Friday, September 29, 2023

பிரிவின் நிம்மதி

 என் வார்த்தைகளை உதிர்த்து போட்டுவிடும் உன் அமைதி

 என் அமைதியை குலைகின்ற அலட்சியம் 

ஒரு துரும்பென என்னை உதறிவிடும் 

தருணங்களில் எல்லாம் 

இதுவே கடைசி என்று நான் முடிவெடுக்கும் 

நேரங்களில் நீயே மீண்டும் தொடங்கி  வைக்கிறாய் 

இன்னும்மொருமுறை பிரிவின் நிம்மதி கலைக்கப்படுகிறது !




Thursday, September 28, 2023

விரும்பாத வழித்தடங்கள்

 மூன்று இடங்களுக்கு நான் போவதற்கு 

சிறிய பயம் கலந்த தயக்கம் 

எப்போதுமே உண்டு 

காவல்நிலையம் 

வெறும் சொற்களோடு நிற்கிறது 

காவல்துறை உங்கள் நண்பன் என்று 

ஏனோ அதன் சுவரை எட்டி பார்க்கும்போது 

ஒரு அச்சமும் எட்டி பார்க்கிறது 

அதன் ஒவ்வொரு செங்கல்லும் 

ஒரு நிஜக்கதையோடு புதைக்கப்பட்டதுபோலிருக்கிறது 

விண்ணப்பம் கொடுக்க வந்த 

விதவை பெண் கற்பழிப்பு 

அடித்தே கொல்லப்பட்ட தந்தை மகன்  

புகார் கொடுக்கவந்தவர்களையே கைது செய்வது 

சட்டத்தின் ஓட்டைவழியே 

ஒவ்வொருவரையும் அணுகுவது 

என நிறைய காரணிகள் நினைவில் வந்து போகும் 

படித்த , நமக்கே இந்த நிலையினில் 

படிக்காதவர்கள் நிலை 


அடுத்து மருத்துவமனை 

அதன் வாசமே ஒருவித நோயை சுவாசிப்பதுபோலிருக்கும் 

வர்த்தக வளாகம் போல அதன் வடிவம் இருக்கும் 

இளம் மருத்துவர்களின் ஆராய்ச்சிக்கூடம் போலவும் இருக்கும் 

எண்ணற்ற உயிர்களை காப்பாறினாலும் 

உயிரோட்டமில்லாது ஒரு உணர்வு அதன் 

உள் நுழைகையில் வருகிறது 


அடுத்ததாக அரசு அலுவலங்கள்  

அதன் கட்டிடம் ஊழல் என்னும் வர்ணம் 

தீட்டப்பட்டதை எந்த நிற குறைபாடு 

உள்ளவராலும் உணர்ந்துகொள்ளலாம் 

உங்களை ஒரு சோம்பேறித்தனம் தொற்றிக்கொள்ளலாம் 

வந்த காரியத்தை நினைத்து நொந்து போகலாம் 

அலைக்கழிக்கப்பட்டு ஒரு மூலையில் 

அமர்த்தப்பட்டு இருக்கலாம் 

வருபவர் போவரால் அலட்சியப்படுத்தப்பட்டு இருக்கலாம் 

இதன் எந்த சுவடுமே கவனிக்கப்படாமல் 

அலைபேசியில் அந்த அரசு அலுவலர் 

அமிழ்ந்து போயிருக்கலாம்..


இன்மூன்றின் வழித்தடங்களையும் 

மனது மறந்துவிடவே விரும்புகிறது  




ஒரு புன்னகை

 

ஒவ்வொரு முறையும் 

அந்த போக்குவரத்துக்கு சமிக்கைக்கு 

என் மீது தான் எத்தனை கோபம் 

 சிவப்பான கண்களுடன்  என்னை முறைக்கிறது 

சிலந்தி வலையை போல என்னிலும் அது பரவிவிடுகிறது

வலப்பக்கத்தில்ருந்து மாலைநேர 

மெல்லிய ஒளியை போல ஒரு புன்னகை 

என்னை நோக்கி ஒரு மழலை 

காரணம் எதுமின்றி சிரித்தபடி 

அதன் சத்தம் 

இறகை உதிர்த்த ஒரு பறவையை போல 

ஒரு வனதேவதையின் வாசம் அதன்மேல் 


அது சிரிக்க சிரிக்க 

இளவெயிலின் ஒளி நிலவின் சாயலை பரவ செய்தது 

வெறும்கையை நீட்டி பெற்றுக்கொள் என்றது 

அன்பின் வெளிச்சத்தை.. 

அன்று முழுவதும் என் அலுவலகத்திலும்  

அதை பரவ செய்தேன் !




Wednesday, September 27, 2023

கடற்கரை மணல்

  கடற்கரை மணலை போல

 பரவி கிடக்கிறது என் வார்த்தைகள் அலையாய் வந்து வாசித்துவிட்டு போ!

வெறுமையின் மேற்பரப்பில்

விண்ணை நோக்கி தவமி ருக்கின்றன !

 சில சமயம் அதை

மழலைகள் எடுத்து கவிதை செதுக்கிருக்கலாம் கரைத்துவிடாதே!


 நீ உள்ளிழுத்து சென்ற வார்த்தைகள் போக மீதமிருப்பவையும் 

உனக்காக தான் பலரிடம்

மிதி வாங்கி காத்திருக்கிறது !


அவை காத்திருக்கும்

தருணங்கள் பொறுக்காமல் 

காற்று தன் கரங்களால் உன்னிடம் சேர்த்த வார்த்தைகள் 

பேச்சற்று போயின !





Tuesday, September 26, 2023

கூப்பிடும் தூரத்தில்

உன் நினைப்பு ஒன்று

 என்னை நினைக்கக்கூடாது என்று

எச்சரித்து விட்டு போகிறது!


 சாயங்காலம் ஆனவுடன் 

சொல்பேச்சு கேளாமல் சாய்ந்துகொள்கிறது

 உன்னைநோக்கி  என் நிழல்!


தேநீர் பழக்கத்தை நிறுத்துவது

 எப்படி சாத்யமில்லையோ அப்படியே உன்னை பார்ப்பதை நிறுத்த சொல்லுவதும் !

 நீ திருடி செல்வதற்காக பத்திரமாய் வைத்திருக்கிறேன் தினசரி உறக்கத்தை!


 தானியங்கி வாகனம் போல் 

உன் பின்னாலே செல்கிறது மனம்!


கூப்பிடும் தூரத்தில் நீ இருந்தும் 

இரையை தவற விட்ட பறவையாய்

 என் சொற்கள் !




Saturday, September 23, 2023

ஏதோவொரு அழுத்தம்

 ஏதோவொரு அழுத்தம் 

எல்லாநாளிலும் தலைகாட்டிவிட்டுட்டு போகிறது 

என்னை மேலும் இனிப்பானவனாகிக்கொண்டே போகிறது 

அது பசியான விலங்கு போன்று 

என் நேரத்தையே தின்று தீர்க்கிறது 

மனதிற்கு விளங்கு போட்டு 

ஒரே திசையில் போகிறது 

சில சமயம் திசை தெரியாது போகிறது 

அடிக்கடி ஏமாற்றம் ஏமாற்றமால் வந்துபோகிறது 

காற்று கள்வர்களின் பக்கம் 

கள்வர்கள் உண்மை பேசும் காலம் 

காலம் பேசத்தெரிந்தவர்களின் கையில் 

கைகள் செய்வதறிய சூழல் 

சூழல் குழப்பங்களின் சூழ்ச்சியில்

சூழ்ச்சி அறிந்தவர்கள் மகிழ்ச்சியாய் 

என் பாதை ஏதோவொரு 

அழுத்தத்தோடே போகிறது 

அதன் முடக்கு வளைவை தேடி..



 

Friday, September 22, 2023

மொழி!

 மொழி திணிப்பு, எதிர்ப்பு என

ஊரெல்லாம் அடித்துக்கொள்ள 

நம் மொழி என்னெவென்று 

மொழிக்கே விளங்கவில்லை !

இம் மொழிக்கு எழுத்தும் இல்லை 

பேச்சும் இல்லை 

அனாலும் தாய் மொழியைவிட இனிக்கிறது !

தகவல் சாதனம் ஏதுமின்றி 

என்னிடம் பேசுகிறது உன் மொழி 

அறிவொப்பொலி துணையின்றி 

அது என்னை எழுப்பிவிடுகிறது 

உன் வெட்கங்களை வெட்கமின்றி 

வெளியிட்டு புன்னகைக்கிறது!

பிள்ளை மொழிகளை போல 

பிழையின்றி இருக்கிறது !

தாய்மொழியாய்  ஏற்கச்சொல்லி

 மவுன மொழியே உண்ணாவிரதம் இருக்கிறது !

இறுதியாக உன் தாய்மொழியை அறிந்துகொண்டேன் 

உன் விழியே அது !





Wednesday, September 20, 2023

வரி

 பழுதுபட்ட சாலை பள்ளங்களில்

 நிரம்பி வழிகிறது நான் கட்டிய 

சுங்க வரியின் நாணயங்கள் 

சில குழிகளில் எங்கள் குழந்தைகளின் உயிர்பலி !


உடைத்துக்கொண்டு வீணாகும் 

குழாய்களில் எல்லாம் எங்கள் குடிநீர் வரி !


சேவைக்கும் வரி செலவுக்கும் வரி 

சல்லடை வாளியில் எங்கள் சேமிப்பு !

எங்கள் கழிவறைக்கு பின்னால் 

குவளையோடு நிற்கிறீர்கள் 

வரி வசூலிக்க !

என் வருமானத்தை வங்கியில் கட்ட 

வரிசையில் நிற்கும்போது 

பலத்த பாதுகாப்புடன் ஓடுகிறான் உங்களின் கூட்டாளி 

வாங்கிய கடனை ஏமாற்றிவிட்டு 

வந்தே பாரதம் !



Monday, September 18, 2023

கோலம்

 காலையில் எழுந்தவுடன்

எல்லோரும்

சூரியனை நமஸ்காரம்

செய்கிறார்கள்

சூரியன் மட்டும்

உன்னையும்,

உன் கோலத்தையும்,

நமஸ்காரம் செய்கிறது..!


உன் வீட்டில்

யாருமில்லா நேரம்

நீ போட்டு வைத்த

கோலமும், நானும்,

தனிமையில். .


வெள்ளைக் கோலப்பொடியை

உன் சிரிப்பிலிருந்துதான்

தயாரிக்கிறார்களா?


கோலம் போடும் போது

வித விதமாய் வெட்கப்படுவாயா?

ஒவ்வொரு வர்ணப்பொடிகளிலும்

துல்லியமாய்த் தெரிகிறது

உன் வெட்கம்..!


கோலத்தின் அழகிற்குப்

போட்டியாக

சுற்றிலும் உன் பாதச் சுவடுகள்




என் இருப்பிடம

 நீள அகல வாஸ்துக்களால் கட்டுப்பட்டதல்ல

 ஏதோவொரு நிறத்தின் சாயமும் பூசப்படவில்லை 

குறிப்பிட்ட தெருவினுள் சுறுக்கிவிடமுடியாது 


அருவியும் ஆறும் என் குளியலறை போல் இல்லை 

காற்றை வடிகட்ட எந்த சாரளமும் இல்லை 


கூடவே வரும்படியான புத்தக அறை 

போதும் வரை அந்த சமையலறை 


பாதியோடு நிற்கிறது படுக்கையறை 

பிரபஞ்சத்தின் தலையணை இன்னும் வந்துசேரவில்லை 


நட்சத்திரங்களை பறித்துக்கொள்ள 

என் தோட்டத்தின் வேலியை தாண்டினால் போதும்


 உலகத்தின் விளிம்பில் என் இல்லத்தின் அழைப்புமணி 

அன்புகொண்டு அழைத்தால் 

உடனே திறப்பேன் சூரிய வெளிச்சம் கொண்டு 



Friday, September 15, 2023

உன் பெயர்

 உன் பெயர் முன்னிலும் 

அழகாகி கொண்டே போகிறது 


நீ இல்லாத தனிமையை நிறைவு செய்கிறது 

அலை பேசியில் பதிந்திருக்கும் உன் பெயர் 


முகமற்ற அந்த பெயரில் 

ஒப்பனைமிகுந்த அழகு தெரிகிறது 


அடிக்கடி என் கண் திருஷ்டி பட்டாலும் 

அதன் அழகு குறையவில்லை 



நீ அழைக்காவிடினும் உன் பெயரின் 

அழகு தாழவில்லை  


சிறு வெட்கத்தின் சாயல் 

ஒரு பெண்மையின் வடிவம் 

அந்த பெயரில் படிந்திருக்கிறது 


உன் பெயரின் அர்த்தம் கூகிளில்

 பின்வருமாறு இருந்தது 

"அழகு" 


Wednesday, September 13, 2023

உன் வெறுப்பை

நீ கோபத்தில் பேசி திரும்பியவுடன்

 உன் கோபம் மீண்டும் திரும்பி கெஞ்சிவிட்டு செல்கிறது 

அவளை கோபிக்காதே என்று..

உன் வெறுப்பை இன்னும் ஆழமாய் அழுத்தமாய் காட்டிவிட்டு போ நீரில் அமிழ்த்திவிடும் ஒரு பந்தைப்போல 

உன் மௌனம் என்னிடம் பேசிவிட்டுப்போகிறது

 என் அறை முழுவதும்

 உன் அமைதி நிரம்பியிருக்கிறது 

உன் எண்ணா விரதத்தின் காரணம் என்னவென்று சொற்களால் நிரப்பி தூரத்தில் தூக்கியெறிந்துவிட்டு போ 

உன் பிரிவின்  சேமிப்பாய் வைப்பேன்




Friday, September 8, 2023

ஒரு கோப்பை

அதன் போதை 

மதுவுக்கு கொஞ்சம் கீழே 

அவள் பார்வைக்கு கொஞ்சம் மேலே !

 அதன் சூடு 

கதிரவனின் வெப்பத்தை உணரவைக்காது !

அதன் மனம் 

காலை எழும் மண்வாசத்தை மறைக்கச்செய்யும்! 

அதன் நுகர்வு

 உற்சாகத்தின் நுழைவாக இருக்கும் !

அதன் நிறம் 

வெளிச்சத்தின் ஆரம்ப புள்ளி !

ஒரு கோப்பை காபி !

தளும்ப தளும்ப நினைவில் கொள்ளலாம்!



 

இரவு

 நீ கோபத்தில் பேசிய 

வார்த்தைகளை பிடித்து 

வானத்தில் தெளித்து விட்டேன் அவை நட்சத்திரங்களாகி போயின !


இரவில் நீ தனிமையில் அமர்ந்திருந்த 

அந்த மரம் போதை மரமாகியது !


என்றொவொரு இரவு 

ஏதோவொரு வயதில் 

தொலைத்துவிட்ட தாவரவியல் புத்தகம் நீ 

எப்போது திருப்பி தரப்போகிறாய் !


பின்னிரவில் நீ விழித்துவிடக்கூடாதென இரவே நிசப்தத்தை போர்த்திவிடுகிறது நான் வேவு பார்க்க அனுப்பிய மின்மினிகளையும் சேர்த்து !





Wednesday, September 6, 2023

அலைபேசி உரையாடல் !

அரை நாழியில் முடிந்துவிட்ட 

நம் அலைபேசி உரையாடல் 

காற்றின் அலைவரிசையில் கரைந்துவிட்ட்து! 

முன்பே பேசிப்பார்த்து குறிப்பெடுத்த காகிதமெல்லாம் கழுவி ஊற்றியது !

என் உடல்நீர் என்னையே 

காறித்துப்பியது வியர்வையாக !

என் ஆறடி உயரம் 

ஏளனமாய் என்னை பார்த்தது!


 நான் தடுமாறுகிறேனா 

நீ தொடரவிடுவதில்லையா என்ற 

தீர்ப்புக்குள் வராத தவிப்புகள்!


உன் நேரங்கள் என்னை விழுங்கியது போக மீதமுள்ள தருணங்களில் தயாரித்து கொண்டிருக்கிறேன் உன்னுடன் நடத்த போகும் 

அடுத்த உரையாடலுக்காக !



நீ வருவாய்


 கருவக்காட்டின் நடுவே

 நந்தவனம் போல்  உன் வருகை இருக்கும்..!


வெயிலோடும் ஊரில்

வெண்ணிலா பனிக்கூழ் போல 

உன் வருகை இருக்கும் ..!


அத்துணை கூட்டத்திலும் 

நீ ஒரு வானவில் போல 

தனியாய் வருவாய்..!


மழைவரினும் நனையாத 

மெழுகு பொம்மைபோல நீ வருவாய் !


நீ வரும் அந்த ஒற்றை 

நாளுக்காய் வற்றிய 

விழிகளோடு காத்திருப்பேன் 

திரும்ப திரும்ப என்னை ஒரு ஓரப்பார்வையில் உதாசீனப்படுத்திவிட்டு போவதற்காய் ..

உலையில் கொதிக்கும் பொங்கலுக்கு நீ காட்டும் இரக்கும் கூட என் மீது வைப்பதில்லை 

அடுத்த திருவிழாவுக்கும் ஆனந்தமாய் வருவேன் உன் வருகையே என் திருவிழாதானே 





அழகு

அந்த பேருந்து நிறுத்தத்தில் திருமணத்திற்கு முந்தய 

வயதுடைய ஒரு பெண் 

மாநிறத்திற்கு குறைவான நிறமவள்!

மிக குறைவான அழகானவள் என்று தன்னாலே நம்பப்பட்டவளாய் தெரிந்தால்

பேருந்து  சாரளத்தின் விளிம்பில் நான் அவளையே உற்று நோக்கிக்கொண்டிருந்தேன் 

வேறு யாருமே இல்லாத இடத்தை சோதித்துக்கொண்டாள் மீண்டும்

 அவளையே பார்த்தேன்..

 இம்முறை இழையோடும்

 வெக்கத்தில் நெளிந்தாள்


 பேருந்து நகர்ந்தவுடனும் 

திரும்பி பார்த்தேன்


 மெல்லிய புன்னகையில் 

பரவசம் அவளுக்குள்,


அவளின் அழகு மேலான 

நான் கொடுத்த தன்னம்பிக்கை 

கொஞ்ச நேரமாவது 

அவளுக்குள் இருக்கும் 


அழகு என்பது வரையறுக்கப்பட்டதில்லை 



Monday, September 4, 2023

ஆசிரியர் தினம்

 நம் நாட்டின் மீதான 

பெருங்கோபங்களில் இதுவும் ஒன்று

 கல்வியை வரைமுறையின்றி விற்பது கற்பித்தவன்(தனியார் )நடுத்தெருவில் நிற்பது 

ஆறு இலக்கத்தில் கல்வி கட்டணம் ஆசிரியர்களுக்கோ அடிப்படை ஊதியங்கூட இல்லை 

வருங்கால வைப்பு நிதியும் 

ஈட்டுறுர்தியம் பிடிப்பதில்லை 

அரசும் கேட்பதில்லை 

அவர்களும் ஒருவகையில் கல்வி தொழிலதிபர்கள் தானே

நீங்கள் கடந்துசெல்லும் 

ஒரு தற்காலிக ஆசிரியரின் 

கல்வி தகுதியும் வடநாட்டு கட்டிட தொழிலாயின் ஊதியத்தையும் கேட்டுப்பாருங்கள் 

நாம் வாழ பழகிவிட்டோம் 

நம் ரௌத்திரத்தை அடகுவைத்துவிட்டோம்

ஊழலை பழகிவிட்டோம் 

உப்பை குறைத்துவிட்டோம் 

மாணவர்களின் மிரட்டலில் இருந்து நிர்வாகத்தின் நெருக்கடியிலிருந்து வீட்டின் வறுமையிலிருந்து 

உருவாக்கி தருகிறோம் உலகின் உன்னதமான வெற்றியாளர்களை...

 வாழ்த்துங்கள் இன்று மட்டும் 

ஆசிரியர் தினம் 




Sunday, September 3, 2023

அவள்!

 அலுவலகம் முடிந்து 

வீடு திரும்பும்போது பொதுவாகவே

அரவை மில்லில் வெளிவரும் துகள்களாய் உருமாறி இருக்க 

கூடவே உடலசதியும் ஒட்டிக்கொள்ள

வெறுமை சூழ வீட்டுக்கு சிற்றுர்த்தியில் 

 போதாக்குறைக்கு இந்த 

போக்குவரத்து நெரிசலும் பதம் சேர்க்க 

போதும்வரை சோதித்த இன்றய பொழுதை நொந்துகொண்டு புறப்படத்தயாரேனேன்,

........

எதார்த்தமாக இடதுபுறம் 

தலைத்திருப்ப சிரித்தபடி அவள் ..!

எனக்கு இடத்துப்புறமாக வந்தாள் அத்தனை நெருக்கடியிலும் ,

ஒவ்வொரு திருப்பத்திலும் 

வேண்டி கொண்டேன் !

என் பாதையிலே தொடர்ந்து வந்ததால்

 மனம் மகிழ்ந்தது !

புறவழிசாலையிலும் முந்திக்கொண்டு சென்றாள் ,

குன்றத்தூர் அருகே மீண்டும் 

என் அருகாமையில்..!

 அவளின் வருகையால் என் 

தெரு வந்த நேரமே தெரியவில்லை 


தூரத்தில் அவள் !

பெயர் நீல நிலா..

 வீடு சிவசக்தி நகர் என்று 

செய்திகளை பார்த்து தெரிந்துகொண்டேன்