Thursday, November 3, 2022

தோற்றுத்தான் போகிறேன்

 தோற்றுத்தான் போகிறேன்

ஒரு முறை இருமுறை அல்ல பலமுறை

தோற்றுத்தான் போகிறேன் !

ஓட்டப்பந்தயத்தில்

ஓவியம் வரைவதில்

பாடம் படிப்பதில்

மனப்பாடம் செய்வதில்

அழகான கையெழுத்துகளில்

ஆங்கிலம் உரைப்பதில்

வெவ்வேறு விளையாட்டுகளில்

வித விதமான புதிர் போட்டிகளில்

தோற்றுத்தான் போகிறேன்

என் மகளுடன் ...மகளுக்கா ..!





ஒற்றை புகைப்படம்..

 மகிழ்வான நாட்களில் பலவித

மலர்களின் நிழற்படங்களும்..

கவலை வரும் போதெல்லாம்

கடவுள்களின் புகைப்படங்களும்..

கனவுகள் வரும் காலங்களின்

வண்ண வண்ண படங்களும்..

வால்பேப்பராய் அவ்வப்பொது

அலங்கரித்த என் அழைப்பேசியில்...

இவை மொத்தமுமாய் நிறைந்த

ஒற்றை புகைப்படம்..

இனி என்றும் இருக்கும்

என் குழந்தையின் குருஞ்சிரிப்பு..




மனப்பொறுத்தம்...

 வணக்கம் சொல்லும் வாழை

வகை வகையாய் அலங்காரம்

வெடித்த்து சிதரும் பட்டாசுகள்

பட்ட பகலிலும் வர்ண விளக்குகள்

பேணர் முழுக்க பலரது முகங்கள்

இனிக்கும் இசை கச்சேரிகள்

வீணாக்கப்பட்டாலும் உணவுகள் பலவிதம்

நிறை குறை கூரி திரியும் உறவுகள்

மேற்கத்திய மங்கள வாத்யங்கள் என

நிரந்திரமில்லா நிறமிகளால்

நிரப்படுகிறது திருமணம்

எவரேனும் கேட்பதில்லை

வாழ்க்கைக்கான சிறிதளவு

மனப்பொறுத்தம்...




சூடான தேநீர்

 செடியில் பூத்திருக்கும் சூரியன்

சிரித்து மகிழும் சிட்டு குருவி

காட்டு பூக்களின் கட்டழகு

முகில் துகிலுரிக்கும் பூமி

மகளின் துள்ளல்

குளிரூட்டும் மூடுபனி 

கூடவே சூடான தேநீர்

நிம்மதியான ஞாயிறுக்கிழமை

எப்போதும் வருவதில்லை..!



உன் ஊர் தெப்பம்

 உன் ஊர் தெப்பம்

உன் வீட்டு தெருமுனை

என் மூளை பார்வைக்கு 

உத்தரவு இடுகிறது

நெருங்கி வருகையில் ஒரு கடுகளைவு

உருவத்தை கண்டுபிடிக்கிறது

இந்த முறை உன் கையில் கைக்குழந்தை யும்

எதிர் எதிர் திசையில்

நொடி பொழுதில் கடக்கிறது

 நம் வாகனம்

உயிர் ஊடுருவ ஒரு பார்வை

என்ன நினைத்தோம் இருவருக்குமே

தெரியவில்லை

இதயம் தாறுமாறாக துடித்து பின் நிலை

கொண்ட ஒரு தருணம்

இனம் புரியாத மனம் 

புன்னகைப்பதா,புன்படுவதா

எதையுமே வெளிப்படுத்தாமல் அந்த

நொடியும் கடந்துவிட்டது

வருமா இன்னொருமுறை இந்த நொடி.



அன்பின் பரிசு

 பூ நகை,

தேனீ குணம்

தினம் ஒரு அவதாரம்

எங்கள் மருந்தகம்

குறும்பின் உறைவிடம்

என் வருங்காலம்

புரிதலின் தூரிகை

அன்பின் பரிசு!

பூக்களின் சிபாரிசு!

எங்களின் வாரிசு!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகளே!



நிலவின் நிழல்


நீ

நிலவின் நிழல்

வானவில்லின் துகள்

கவிதையின் கைக்குழந்தை

 பாரதியின் புத்தகம்

கனவுக்களுக்கான நூலகம்

 மலர்களின் முதல் கனவு

பூங்காவின் தளவமைப்பு 

சிரிப்பின் உரிமம் ..

வர்ணங்களுக்கு எடுகோள்

உன் பார்வை விதையில்

எனக்குள் கவிதை முளைக்கும்

உன் புன்னகை ஈரத்தில்

எழுத்துக்குள் எனக்குள் பூக்கும் !

நல்ல வேலை இன்று நீ

என்னுடன் இல்லை ...

இருந்திருந்தால் - பல

மரங்களை இழக்க நேர்ந்திருக்கும்

கவிதை புத்தகங்கள் தயாரிக்க






பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 பரிவும் பாசமும் உன் பண்பு 

அறிதலும் புரிதலும் 

தெரிதலும் தேடுதலும் கூடப்பிறந்தவை 

நேர்மையும் நியாயமும் உன் இலக்கணம்  

சிறு ,பெறு ஊடல்களானாலும் ,உடன் மறக்கும் குணம் 

எந்நேரமும் நானே உன் இலக்கு 

அன்பை சுமப்பதில்அனைத்தையும் மறக்க வைப்பாய் 

சிறு பரிவும் கனிவும் காட்டினாலே

பனி போல கறைந்துவிடுவாய் ! அது வேண்டும் இது வேண்டும் என

அடம் பிடிக்கமாட்டாய் அன்பு ஒன்றையே பிடித்ததாய்

கொண்டாய்!

ஆடம்பரத்திற்கு ஆசை பட்டதில்லை இடம், பொருள், பொன் எதிலும்

நாட்டமில்லை

எக்கணமும் சிக்கனம் !

உதடுகளுக்கு மனசாயம் பூசியவள்! இத்தனை ஆண்டுகளில் எத்தனை மாறி விட்டாய்

துன்பத்தில் துணை நிற்கிறாய் - ஆறுதலாய் அருகில் நிற்கிறாய்

என் முக பாவங்களை மொழி பெயர்த்து பதமாய் நடக்கிறாய் !

அன்பு மனைவிக்கு

ஆண்டுகள் பல வாழ என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!



வைகாசி வருத்தப்பட்டுருக்கலாம்


தினங்களுக்கெல்லாம் பெரு நாள் 

உன் பிறந்த நாள் 

நீ இருக்கும் தெருவுக்கு இன்று தான் திருவிழா 

அகில உலக பூக்கள் ஒன்றுகூடி தங்கள்  

அன்னையர் தினத்தை அறிவித்த நாள் ..

அக்கினி வெயிலில் பனிக்குழந்தை பிறந்ததாக 

மருத்துவ உலகம் பிரமைத்து போயிருக்கலாம் 

நாலாபுறமும்  நிலாவை காணாது 

நாசா விஞ்சானிகள் நாசமாய் போயிருக்கலாம் 

நீ சித்திரையில் பிறந்ததற்காக 

வைகாசி வருத்தப்பட்டுருக்கலாம்







Wednesday, November 2, 2022

சீதா ராமம்

  

சமீபத்தில் நான் ரசித்த ஒரு சினிமா 

இதுபோன்று சினிமாக்கள் மிகவும் அபூர்வம் !

காதல், தேசப்பற்று  ,துரோகம் மதம் மனிதம் கலந்த ஒரு காக்டைல் கலவை!

அடுத்த அடுத்த திருப்பங்கள் நம் விருப்பத்தை அதிகரிக்கின்றது ,

கதை நாயகியின் வருகை இன்னும் திருப்புமுனையாக இருக்கிறது 

Mrunal Thakur  கதைக்கு  உயிரோட்டம் தருகிறார் !

உதடுகளில்  ஒளியிரி விளக்கு (LED light) பொறுத்தப்பட்டதைப்போல  ஒரு புன்னகை !

சோகமான இடத்திலும் சிரித்து விடுவாரோ என்ற அச்சம் எனக்கு !

தான் ஏற்ற பாத்திரத்துக்கு ஏற்ற உடை ,நடை, நடனம் 

பாலைவனத்தில் கிடைத்த பனிக்கூழ் போல படம் முழுக்க பரவசப்படுத்துகிறார்!

சல்மான் துல்கருக்கு இது வாழ்நாள் திரைப்படம்!

காஸ்மீர் குளிரை காட்சிகளில் உணரமுடியும் !

சிறு சிறு பாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்,

பிரமாண்டம் குறையாத காட்சி கட்டமைப்பு ,நேரத்தை வீணாக்காத  நேர்த்தியான திரைக்கதை  

ஒப்புவுமையற்ற ஒளிப்பதிவு என எதையும் குறைகூற முடியாது


வாய்ப்பு கிடைத்தால் கண்டு களியுங்கள்



வேலையில் இடைவெளி

 கொட்டும் மழை ரசிக்க மனமில்லை பிடித்த கவிதை படிக்க நேரமில்லை நில்லாத நொடிகள் எனதில்லை பொழுதும் பகலும் ஒளியின் வேகம் 

கார்பன் கனவுகள்,வாகன நினைவுகள்

உடலின்மொழி கேட்க வழியில்லை 

வேலை வேளையை தின்று தீர்க்கிறதுக்கு

ஒரு வேளை வேலையில் இடைவெளி(break) தேவைப்படுகிறதோ ?

வெள்ளைக்காரர்கள் தான் மனிதர்களா ?

நாமெல்லாம் இல்லையா ?

வாரத்தில் இருநாள்

 விடுமுறை நமக்கில்லையே !

திங்கள்கிழமை அலாரம் அடிக்கிம்போதெல்லாம் 

யோசனை வருகிறது !



என் அப்பா

 வறண்ட சரளை நிலத்தில் ,

நீர் நிலைகள் அறவே அற்ற, சிவகங்கை மாவட்டத்தில்... மழைக்காடுகள் போல் 

மரங்களை வளர்த்த

 ஒரு முன்னோடி விவசாயி!

இரசாயன உரங்களின்றி

 இயற்கை முறையில் தான் மட்டுமன்றி பலரருக்கும் உத்வேகமாகவும் முன்னோடியாகவும் இருந்திருக்கிறார் 

பலர் இன்று மறந்து போயிருக்கலாம் கல்வி கற்பித்த ஆசிரியராகவும் மட்டுமன்றி 

காடு உற்பத்தி செய்த இயற்கையாளரும் கூட...

என் அப்பா !

அடர்ந்த செறிவான மர நிழலில் எங்களின் ஆரோக்கிய 

சுவாசத்தின் விதையை விதைத்தவர் 


என் தந்தையை பற்றி நான் கவிதை ஏதும் இதுவரை எழுதியதில்லை 

ஒரு கவிதைக்குள்

அவரை பற்றி அடக்கிவிட முடியாது என்பதே உண்மை 

என் எழுத்து என் நிமிர் என் ஆளுமை  

எல்லாம் உங்களின் மகிமை 

தந்தையர் தின வாழ்த்துக்கள் !

கொங்கன் ரயில்பாதை பயணம்

 சொர்க்கம் நரகம் என்பதில் எனக்கு 

நம்பிக்கையில்லை எனினும் 

சொந்த ஊருக்கு செல்லும் பயணம் 

அதற்கு ஈடாக இருக்கப்போவதில்லை

அதுவும் கொங்கன் ரயில்பாதை போன்ற கொள்ளை அழகான வழித்தடம் வேறெங்கும் இல்லை 

இயற்கை அருவிகளின் இடையிலே 

நீண்ட மரங்கள் குடை விரிக்க 

அகண்ட ஆறுகள் இடைமறிக்க 

கரும் குகைகள் குறுக்கிட 

அரபி கடல் அவ்வப்போது 

விழிகளுக்கு விருந்தாக 

பசுமை வயல்கள் கற்பனைக்கு 

பந்தி விரிக்க 


தென்னை மரங்கள் விரலசைக்க 

தென்றல் தலைமுடி கோதிவிட 


காணும் இடங்கள் எல்லாம் 

இயற்கையின் கவிதை தொகுப்பு

 புத்தக கண்காட்சிக்கு இணையான இரயில் பயணம் 

இரும்பு பெட்டிகளின் 

பெரு மூச்சு நிற்கிறது 

என் நாகரீகம்..  என் பாரம்பரியம் 

விதைத்த இடத்தில்...





விருப்பபொழுதுகள்

 தனி சீருந்து , 

ஒற்றை மலைப்பாதை

சிறு தூரல் ,பசுமை செறிவு 

மூடு பனி , தேடும் மேகம் 

நீண்ட அருவி , நீ அருகாமை 

தீண்ட காற்று ,கூரைக்கடை தேநீர் 

ஈசல் பிடித்தல்,காட்டுப்பூ நுகர்தல் 

குறு ஓடை ,ஊடே கை  நனைத்தல் 

கட்டு சோறு ,கூட்டாளி அரட்டை - அவ்வப்போது 

தனிமை  இனிமை நினைவு

மறையும்வரை அந்த பறவை 

துரத்தி பிடிக்க பட்டாம்பூச்சி 

அலைவரிசை கிடைக்கா  அடர்வனம் 

மரத்தின் மடி படுக்கை 

நிறம் கரைய தூரல்  நனையல் ......





ஒரு விரல்

 எங்கள் வருங்காலம் 

உங்கள் கைவிரல்களில்...

 மலையை குடையாத 

மணலை திருடாத 

மண்ணை மலாடக்காத 

மரங்களை வெட்டாத 

மதத்தை கலக்காத

 மருத்துவத்தை விற்காத 

மரபை மறக்காத

 மதுவை முன்னிறுத்தாத

 மனிதத்தை ஒதுக்காத 

மானத்தை அடகுவைக்காத 

மக்களை விலைபேசா

 ஒரு மகத்தான அரசை

 ஒரு விரலால் அடையாளப்படுத்துங்கள்...!

 சாலை வரி, சரக்கு வரி, சேவை வரி சுங்க வரி, விற்பனை வரி,

 வருமான வரி,வாகன வரி,

 வீட்டு வரி நில வரி, என வரியில் வெறுமென அரசாங்கம் நடத்தும் வழிப்பறியர்களை 

ஒரு விரல் கொண்டு விரட்டிவிடுங்கள்

 எங்கள் வருங்காலம்

 உங்கள் விரல்களில் 

               By 

SILSHIYA SHERWIN ROUSSEAU.  

              4th STD


வெளிச்ச பொழுதுகள்

 காலை துளி வெளிச்சமும்

 என் தேநீர் பொழுதும் 

எப்போதும் இதமானவை 

பெரு வெளிச்சம்  

கீறலாய் சிறு  சாரலோ 

பெயருக்கு பெரு மழையோ 

உற்சாகத்தில் உளம் கரைப்பவை 

 சுட்டெரிக்காத அந்த செல்ல வெயில் அவள் தழுவலைபோன்றஅடர்த்தியானது 

மகரந்த பரிமாணம் அந்த 

மாலை வெளிச்சம் 

என் மிகவிருப்பப் பொழுதுகள் 

வெளிச்ச பொழுதுகள்




உலக புத்தக தினவாழ்த்துகள் !

 மும்பை வந்ததிலிருந்து 

மறந்து விட்ட, மறக்கடிக்கப்பட்ட பழக்கம் வாசிப்பது ,எழுதுவது..! வாசிப்பது இருந்தால் மட்டுமே எழுதுவது சாத்தியம் 

பக்கத்திலே புத்தகங்கள் இருந்தும் நேர சூழல்கள் பாத்தியம் தருவதில்லை 

நாம் சுவாசிப்பதை போன்றே அவசியமானது புத்தகம் வாசிப்பது !

 நல்ல நன்பர்களை அலமாரிக்குள்ளும் வைத்துக்கொள்ளலாம்!

ஆராய்ச்சி நிலையங்களை அருகில்  அடுக்கியும் வைத்துக்கொள்ளலாம்!

 புரட்டினால் புத்துணர்வு முகாம்களுக்கு போய் வரவும் செய்யலாம் !

வரலாறுகளை விரல்களில் பிடித்துக்கொள்ளலாம் !

பிடித்த காதலிக்காக கவிதை களவாடிக்கொள்ளலாம் !

படிக்கலாம் வாங்க !

உலக புத்தக தினவாழ்த்துகள் !



கர்னலா மலைக்கோட்டை..நடைபயணம் (Mumbai).

 வீட்டிலிருந்து ஏழு நிமிட தொலைவில் உள்ள அந்த அடர்வன மலை கோட்டைக்கு கால் நடையாக சென்றுவர ஏழு ஆண்டுகள் பிடித்துவிட்டன...!


கர்னலா மலைக்கோட்டை  நடைபயணம்

உடலுக்கும் உள்ளத்துக்கும் இதமானதாய் அமைந்தது 

என்ன கொஞ்சம் கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கிவிட்டது 

எங்கு போனாலும் இந்த மும்பை வாசிகள் அரைக்கால் உடையுடன் கிளம்பி விடுகிறார்கள்..! விடுமுறையை முறையாய் கழிக்கிறார்கள் 

நடக்க பழகிய சிறுவர் முதற்கொண்டு இளம் முதியவர் வரை , நடந்தும் ஊர்ந்தும் கொண்டிருந்தனர்

 திரும்பி வரும் போது மேலே வருபவர்களின் உரையாடல்களின் நகைச்சுவையில் வந்த தடம் தெரியவில்லை. 

மழை காலத்தில் இன்னும் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்திருக்கும் 

உடற்பயிற்சி தினசரி தேவை 

கூடவே கேப்பை ரொட்டியும் கம்பு ரொட்டியும் தேவை என உணர்த்தியது







வாரணாசி பயணம்!

 

உத்திர பிரதேசம்!

நாம் நினைப்பதுபோல இல்லை..

மேம்பாலங்கள், மேன்படுத்தப்பட்ட சாலை கட்டமைப்பு, நவீன,டிஜிட்டல் முறைக்கு மாறியிருக்கிறவனக்கமே


கிராமங்கள் அங்கேயும் அனாதைதான் 


எனது நன்பரின் உதவியுடன் இந்த பயனம் சாத்தியமாயிற்று..

கோதுமை வயல்கள் நடுவே அவரது இல்லம் குளிர்சாதன பெட்டி க்கான அவசியமின்றி இருந்தது 


கோடையில் நெல்லும் குளிர் காலத்தில் கோதுமையும் கூடவே துவரையும்,அவரையும்,கொத்தமல்லியும் ,காய்கறி மற்றும் பருப்பு வகைகளும் இயற்கைக் விவசாய முறையில் விளைவிக்கின்றனர்..


உணவு வகைகள் வியக்க வைக்கிறது

காலையில் நீர் தருவதில் தொடங்கி இரவு வரை தொடர்கிறது இனிப்பு வகைகள்..உருளைக்கிழங்கு இல்லாமல் ஒரு வேளை கூட இல்லை..


வாரணாசி யும் மதுரைக்கு ம் நிறைய ஒற்றுமைகள்..

கோவில்கள் தொடங்கி, நெருக்கமான சாலைகள், சிற்றுண்டி   உணவகங்கள் ,தெருவெங்கும் திருவிழாக்கள்..


அங்கும் ராமேஷ்வரம் என்ற பெயரில்

ஊர் இருகிறது..


கங்கையை கங்கா ஜி என்று மரியாதையாய் அழைகிறார்கள்..

கடல் போல கங்கை ...

கட்டுமர பயணம்...

 கங்கை செய்யும் பயணம் பிரமிப்பூட்டுகிறது


புத்த மடாலயஙகள்

பத்தாம் நூற்றாண்டு சிற்பங்கள் என சாரனாத்தில் சரளமாய் காணகிடைக்கிறது 


சிறு வயதில் வரலாறு பாட புத்தகங்களில் படித்ததை நேரில் பார்க்கும் அனுபவம் அளவிலாதது..


ஊடகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து யோகி க்கு இலவசமாக விளம்பரம் செய்ய ,அவர் வெற்றி பெருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


காலை வனக்கமே 

ஜெய் ஷ்ரிராம் தான் 

மனதில் மரியாதை இருக்கிறதோ இல்லையோ ,காலில் பொட்டு பொட்டென்று விழுந்து வணங்குகின்றனர்...


செல்வ செழிப்புடன் உள்ள மாநிலம் நம்மை விட பிந்தங்கியதின் காரணம் தெரியவில்லை.. 


எந்த வட இந்தியாவும் விதிவிலக்கல்ல ,ஆண்களின் பான்பராக் துப்பிய ரங்கோலிகள்

அங்கும் அதிகம்


வரும்போது உடன்பயனித்த ராஜஷ்தான்

முன்னாள் இணை முதல்வர்

திரு சச்சின் பைலட்! தமிழ் பேசியது பெருமையாக இருந்தது


நான்கைந்து நாட்கள் அமைதியாக, அனுபவம் மிகுதியாய் நிறைவாய் முடிந்தது.








கோவா பயணம்


குழுவோடு இந்த பயணம் 

குதுகளமிக்கது, எந்த வரையறுத்தலும் 

திட்டமிடலும் இல்லாத ஒன்று 

எதுகை மோனை போன்ற 

எதுவும் இல்லாதது எங்கள் குழு 

பல மொழி குழு எனலாம் ..!


கொங்கன் ரயில் வழித்தடம் போன்று 

கொள்ளை அழகான பாதை 

இந்தியாவில் வேறெதுவும் இல்லை..! 

மும்பையிலினருந்து செல்லும் வழியெங்கும் 

குகைகள், அருவிகள், சிறு சிறு குன்றுகள் 

இடைமறிக்கும் ஆறுகள், தென்னை மர 

இடைவெளியில் தெரியும் ஊறுகள் 

தென்றல் தாலாட்ட ,கோவாவில் தஞ்சமடைந்தோம் 


வந்தது வங்கமா கோவாவா என கேட்க்கும் அளவுக்கு 

வழியெங்கும் திரிணாமுல் தீதி யின் புகைப்படம் 

அங்கும் அவர் கட்சி ஆரம்பித்திருக்கிறாம் ..


மூன்று படுக்கையறை கொண்ட 

அந்த வீட்டில் நீண்ட  நேரம் செலவிட்டது 

உணவு கூடம் என்பதை நான் 

சொல்லி தெரிந்துகொள்ள தேவையில்லை..


எங்கள் பயணம் சுவாரஸ்யமாக இருந்ததன் 

முக்கிய காரணம் 

அன்னன் ஜேசுராஜ் அவர்கள் ( Jesuraj Mumbai Dmk )

பயணம் முழுவதும் களைப்பே இன்றி அவரும் 

எங்களையும் வழிநடத்தினார் 

என்றே சொல்ல வேண்டும் 


அவரின் நகைசுவை உரையாடலில் 

நேரம் போனதே தெரியவில்லை 


திமுக நிறம் பதித்த முகக்கவசம் ,சன் க்ளாஸ் 

என எல்லாருக்கும் வழங்கி 

ஒவ்வொரு நொடியும் கழகத்தை பற்றியே 

என்னம் கொண்ட மிகசிறந்த திமுக நிர்வாகி அவர் 


நிறைய இடங்கள் கோவாவில் இருக்கிறது 

கண்டு மகிழ்வதற்கும்  உண்டு களிப்பதற்கும் 

வியக்க வைக்கும் தேவாலயங்கள்,கோட்டைகள் 

கடற்கரை ,கப்பலில் கேளிக்கை விளையாட்டுகள் 

என எக்கச்சக்கம் ..

மழைக்காலம் இன்னும் அழகாயிருக்கும் 


கோவா கோவிச்சுக்கக்கூடாது என்பதால் 

மூண்று வேளை மட்டும் குடித்துவிட்டு 

கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தோம் 

(மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு ) 


போதுமான  நினைவுகளை பொதிசெய்து 

புறப்பட்டோம் விடுமுறை முடிந்து!







மாத்தேரான் பயணம்

 

காற்று உள்ள போதே தூற்றி கொள்ள வேண்டும் .. மழை காலம் முடியும் முன்பே மாத்தேரான் சென்று வர வேண்டும் .. 


எப்போதாவது அத்தி பூத்தாற்போல் கிடைக்கும் இடைவெளியில் அந்த மலை பயணம் - 


மனைவி மற்றும் மழலையுடன் அவரவர் உடமையை அவரவர் சுமந்தபடி 

எங்கேயும் கால்கள் வலிக்காதபடி எங்கெங்கும் சிறு சிறு அருவிகள் , இடையிடையே ஓடை

பசுமை குடை பிடித்தாலும் சாரலில் நனைந்தபடி அந்த நடை பயணம் !

 மனதை புதுப்பித்துக்கொள்ள அருமையான தருணம்


மலை மருவி அருவியாய் மாறி கொண்டிருந்த தருணம் ..

 மரம் முகில் பறக்க தேனீர் பருகி கொண்டிருந்தன .. 

மலை நீர் கழுவி கழுவி காயம் பட்ட சாலைகள்


 நாமெல்லாம் துச்சாதனன்கள் துகிலுருக்கப்பட்ட நெகிழிகள் ..


 நினைக்காத நேரத்தில் நனைத்துவிடும் குளிர் .. ..


 மனைவியை போல இந்த மழை கொட்டி தீர்க்கிறது 

மச்சினிச்சியை போல தென்றல் தீண்டி செல்கிறது 

எப்போதாவது எட்டி பார்க்கிறது அந்த சூரியன் 


வசதியான மும்பை பெண்கள் ஏழ்மையான உடையில் !


 மழைக்காலத்தை முழுவதுமாய் அனுபவிப்பவர்கள் இந்த மும்பை வாசிகள் 


 மூடுபனி கூட்டம் கூட்டமாய் முழு அடைப்பு செய்துகொண்டிருந்தது


 மரங்கள் குடை பிடித்திருந்தாலும் அருவியாய் அழுதுகொண்டிருந்ததது அந்த மலை ! 



றக்கி வைத்த 

அலுவலக மன அழுத்தங்கள் கொஞ்சம் , நில சரிவுகளில் நிச்சயம் புதைந்து போயிருக்கும்


இந்த வருடமும் ,இன்னும் சில நாட்களில் மழை காலம் தொடங்கி விடும்






கொரோனா காலத்தின் எமது அலுவலக பயணம்

 மடிக்கணினியை மறைத்து வைப்பாள் - என் 

உடைகளை ஒளித்து வைப்பாள் 

காலில் விழுந்து வணங்குவாள் 

உறங்கும்முன் உறுதிமொழி 

வாங்குவாள் 

அலுவலகம் நான் போககூடாதென்று !

குறைந்தபட்சம் சீக்கிரம் திரும்பும்படி 

முகம் திரும்பி நிற்பாள் என் மகள் !- பாவம் 

அரசாங்கத்திற்கே எது அவசியம் என்று தெரியவில்லை 

ஆறு வயது மகளுக்கு எங்கனம் புரியும் !

அம்மா ஆசிரியை பள்ளி செல்லவில்லை !

அடுத்த வீட்டு அரசு அலுவலர் போகவில்லை! 

மேல் வீட்டு மென் பொறியாளர் போகவில்லை! 

அப்பா மட்டும் ஏன் என -அவள் ஏக்கம் ,நியாயமே !

ஊடகங்கள் ஊதி பெரியதாக்கி விட இந்த 

கோரோனோ காலகட்டத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் 

ஒரு துறை இந்த விநியோக சங்கிலி (SUPPLY CHAIN)

எந்த கைதட்டும் எங்களுக்கில்லை 

பூச்சொரிதலும் ,பொன்னாடையும் எதுவுமில்லை 

இருந்தாலும் ஓடிக்கொண்டே இருக்கிறோம் 

மருத்துவ சாதனங்களையும் ,மருந்துகளையும் 

 உணவு பொருட்களையும் ,உற்பத்தி பொருள்களையும் 

சுமந்து கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம் 

இலட்சக்கணக்கான ஓட்டுனர்கள் ,அதனை இயக்குபவர்கள் 

விபத்துக்களையும் , ஆபத்துகளையும் தாண்டி 

வெயிலும் வேர்வையுமாய் 

உணவகங்களின்றி பல சமயங்களில் பசி பட்டினியோடு 

எல்லை பல கடந்தும் ,சொல்லவியலா பல தொல்லைகள் கடந்தும்

இடம் பொருள் ,இரவு பகல் பாராமல் 

சேர வேண்டிய இடங்களுக்கு சேர்த்துக்கொண்டே இருகிறார்கள் 

இறக்குமதி,ஏற்றுமதி,உள்நாட்டு விநியோகம் என 

இயங்கி கொண்டேஇருக்கிறோம் , இயக்கி கொண்டே இருக்கிறோம்

உலகம் இயங்க ஏதுவாய் எங்கள் KERRY INDEV குழுமம் 

ஓய்வில்லாமல் மகத்தான பணியை செய்கிறது 

அதன் பணியாளர்கள் என்ற முறையில் பெருமை கொள்கிறோம் 

அப்பெருமை மகளின் யாசகம் மறந்து மகிழ்ச்சியை தருகிறது



………….தை .ரூசோ……….