Saturday, January 6, 2024

வீட்டை தேடிய பொழுதுகள்

 எல்லாம் அழகான பொழுதுகள் 

உன் தெரு எதுவென உன் தெருவிலேயே 

தேடிய பொழுதுகள் 

உன் வாசலில் நின்றுகொண்டு 

வீட்டை தேடிய பொழுதுகள் 

நீ இல்லாத தெருவில் திரும்ப திரும்ப 

கடந்துபோன பொழுதுகள் 

உன் தெருவின் முடிவில் இருக்கும் சுடுகாடு 

பூங்காவன பொழுதுகள் 

அறிவின் பேச்சை இதயம் கேட்க்காத பொழுதுகள் 

என் விருப்ப பொழுதான மஞ்சள் வெயிலை போல 

உன் வீட்டின் வர்ணம் 

என் பார்வைகளை பறித்துக்கொள்கிறது 

ஓரமாய் இருக்கும் வாழை மரம் 

அழகான பொழுதுகள் உன் வீட்டை தேடிஅலைந்த பொழுதுகள் 



Tuesday, December 12, 2023

உன் சிரிப்புகள்

 மொட்டுக்கும் விரியாத இதழுக்கும் 

இடையில் பிறந்த குழந்தையாய் 

உன் புன்னகை! 

சிலசமயம் உன்னையே ஒளித்துவைக்க 

இயலாமல் இறக்கி வைக்கும் 

இடம்பொருளாகவும் 

உன் புன்னகை! 

அடர்வனத்தின் தொலைதூர 

நீர்வீழ்ச்சியின் சத்தங்கள் 

உன் மிதமான சிரிப்பின் முன்னாள் ஒன்றுமில்லை !

ஒரு அடர்த்தியான வெயில் பொழுதில் 

படபடவென பெய்யும் மழையை போல 

உன்   இயல்பான சிரிப்புகள் !

எப்போதாவது உன்னைமறந்து 

உன் அதிகப்படியான சிரிப்புகள் 

ஒரு குயிலின் ஆலாபனையை நினைவுகொள்ளச்செய்கிறது  

அதற்குமேலான ஒரு அழகு என்பது 

எதவும் இல்லையென என 

வார்த்தைகள் வர மறுக்கின்றன !

உன் சிரிப்பு அழகின் முகவரி !



உன் ஆடை

 

ஒவ்வொரு முறையும் உடைகள் என பொய் சொல்லி 

பட்டாம்பூச்சிகளை உடுத்திக்கொண்டு வருகிறாய் !

காற்றில் அவ்வப்போது பட்டாம்பூச்சிகள் பறந்துவிட 

வெட்கத்தை உடுத்திக்கொள்கிறாய்!     சிலசமயம் 

அவை படபடக்க துடிதுடிக்க வைக்கிறது 

என் பார்வயை.. !

உன்னையே உலகமெனெ 

உராய்தலின் வழியே உயிர்கொள்கிறது.!. 

 உன் தீண்டலுக்காய் சரிந்து சரிந்து 

விழுகிறது துப்பட்டா! 

 உன் நனைதலுக்காய் எனக்குமுன் 

மழையிடம் வேண்டிகொள்கிறது உன் ஆடை! 

 காற்றுக்கு தலைசாய்க்கும் சாக்கில்

உன்மீது சாய்ந்து சரசம் கொள்கிறது! 

இரு மாதுளைகளை இறுக்கிப்பிடித்தபடி 

 இறுமாப்புடன் சிரிக்கிறது

  என்னை நோக்கி ..!

  ஒவ்வொரு முறையும் உன்னால் 

கலையப்படைவதை தவிர வேறெந்த 

கவலையும் அதற்கில்லை !



Tuesday, November 14, 2023

மழையில்

 மழையில் குளித்தே தன்னை தானே 

துவட்டிக்கொள்கிறது இலைகள்! 

குழந்தைகளின் முத்தத்தில் தான் 

மழையென்பதை மறந்து மகிழ்கிறது! 

ஒரு துளி முத்தமேனும் ஓட்டுக்குள் 

ஒளிந்துக்கொண்ட நத்தைக்கு தரமுயல்கிறது! 

வற்றிய புல்லுக்கு ஒற்றை கண்ணீராய் உருவெடுக்கிறது!

 ஒரு விதையின் பனிக்குடத்தை உடைத்துவிடுகிறது !

இறந்த மலருக்கு இறுதியாத்திரை நடத்துகிறது !

ஏதோவொரு தேடலில் முடிவற்று முடிகிறது !




Wednesday, November 8, 2023

உன் கோபம்

 

உன் கோபம் என்னை கோபப்படச்செய்யவில்லை

உள்ளபடி உன் பாராமுகம்தான் ஏதேதோ செய்கிறது 

மண்ணுக்குள் புதைந்த வேரை போல அழச்செய்கிறது

உதிர்ந்த மலரின் இதழை போல 

கேட்ப்பாரின்றி வெறுமையடைகிறது 

உறக்கங்களை இருள்பறித்துவிட்டு இரவாகிப்போனது 

வெளிச்சத்தின் மடியிலும் நிழலாக சாய்கிறேன் 

தனிமையை அரவணைத்து 

உன்கோபங்களிருந்து விடுபட்டுக்கொள்கிறேன் 

அடுத்த முறையாவது சொல்லிவிடு 

உன்கோபத்தின் காரணத்தை! 



உன் அழகு


உன் அழகு ஒரு நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது

காட்டுமலர்களின் வாசத்தை சுமந்தபடியே 

உன் அழகு பயணிக்கிறது..  

தை வர்ணிக்க பழனிபாரதியின் 

வனரஞ்சினியில் வார்தைகளை 

தேடுவதற்குள் வேறுவடிவம் எடுத்துவிடுகிறாய்.. 

உன் அழகின் பிறப்பிடம் 

இறுதிவரை அறியப்படவில்லை ..

தடுப்பணைகளும் ஒருநாள் திறக்கத்தானே வேண்டும் 

உன் அழகின் கிளைகளை பரவிக்கொண்டே செல்கிறாய்.. 

பேரழகின் கடலில் அது சேர்ந்துவிடுகிறது 

உன் அழகு ஒரு நதியாக ஓடிக்கொண்டே இருக்கிறது 




Tuesday, October 31, 2023

கடவுளின் பிள்ளை

குழந்தையுமல்ல, குமரியுமல்ல 

இரண்டுக்கும் இடைப்பட்ட பருவம்.. 

மிதிவண்டியில் முன்னால் ஒரு கூடை 

கூடையில் அவளுடைய சேமிப்புகள், கொஞ்சம் சிரிப்புகள் 

அடிக்கடி அவளை அங்கு பார்க்கலாம் 

நடைபாதை கடைகளில் பேரம்பேசுவாள்! 

தூரம் நின்று எதையோ ரசிப்பாள்!

விரல்களால் காற்றை விசைப்பலகையாக்குவாள்! 

அறியாதவர்க்கு இசையின் பிள்ளையாய் தெரிவாள்!  

யாரோ ஒருவரின் கூக்குரலுக்கு 

மௌனத்தின் குரலை மறுமொழியாக்கினாள் ! 

அப்போதுதான் கவனித்தேன் 

அவள் காதுகேளாத வாய் பேசமுடியாத பெண்! 

உலகின் தலைசிறந்த மொழியை 

தாய்மொழியை கொண்ட அவள் 

கடந்து போன போது  

கோவில் கருவறையின் வாசனை 

கடவுளின் பிள்ளையல்லவா !




Monday, October 30, 2023

முத்தங்களால்..

 

உன் விரல்களின் தேடுதலில் தொடுதலில் 

குற்றுயிரும் குறையுருமாய் கிடக்கிறேன்! 

எந்த பாகமும் மீந்துபோகாதபடி 

முத்தங்களால் மீதமுள்ள 

உயிரையும் எடுத்துவிடு! 

உன் மரணப்படுக்கையின் அருகில் 

எனக்கொரு படுக்கை தயார்செய்துவிடு !

சொர்க்கத்தில் மீண்டும் பிறப்போம் !





Saturday, October 28, 2023

குழந்தைகளின் ஒலி!

எததனை ஒலி சிதறல்களில் 

நம் கவனத்தை தொலைத்துக்கொண்டிருந்தாலும் 

சில ஒலிகள் மட்டும் நம் 

குழந்தைகளின் கவனத்தை ஈர்த்துவிடும் 

தெருநாயின் அழுகுரல் !

சிறுபறவையின் கூக்குரல் !

சிறுவயது இரவலகர்களின் யாசக குரல்! 

பஞ்சு மிட்டைக்காரரின் ஒலிக்கும் 

பனிக்கூழ் விற்பவரின் ஒலிக்கும் 

பத்து வித்தியாசம் சொல்லுவார்கள் !

படவரியில் வரும் அந்த பிரபல இசையொலி! 

ஒளிவுறு விளையாட்டின் தரநிலை ஒலி !

பெயர் தெரியாத அடுத்த தெரு பாட்டியின் அழைப்பொலி !

குழைந்தைகள் தங்களை தொலைத்துவிடாத 

ஒலிகளில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்!


 

பாட்டி சொன்ன கதைகள்

உன் பாட்டி சொன்ன கதைகள்.. 

நிலாவை பிட்டு உனக்கு ஊட்டி விடும்போது 

ஒட்டி கொண்ட மூன்றாம் பிறைதான் உன் உதடு என்றும் 

மேலும் தன்னை பறிகொடுத்துவிடக்கூடாதென்று 

தோன்றியதுதான் அமாவாசையும் பௌர்ணமியும்! 

நீ உறங்கும் போது சிரித்த சிரிப்புகளின்போது 

பிறந்ததுதான் நட்சித்திரமாம் மேலும் 

பகலில் நீ தேவதையாய் சென்று 

அவைகளை உறங்கவைப்பாயாம்!

உன் ஒரு சிட்டிகை குங்குமத்திற்காக 

குடம் சாய்ந்திருப்பதாக அந்த அந்தி பொழுதின்

செவ்வானத்தை சுட்டி காட்டினாள்!  

பாட்டி வடை சுட்ட கதைகளை விட 

உன்னிடம் சுட்ட கதைகள் அத்தனை பொருத்தமானது!