Tuesday, November 14, 2023

மழையில்

 மழையில் குளித்தே தன்னை தானே 

துவட்டிக்கொள்கிறது இலைகள்! 

குழந்தைகளின் முத்தத்தில் தான் 

மழையென்பதை மறந்து மகிழ்கிறது! 

ஒரு துளி முத்தமேனும் ஓட்டுக்குள் 

ஒளிந்துக்கொண்ட நத்தைக்கு தரமுயல்கிறது! 

வற்றிய புல்லுக்கு ஒற்றை கண்ணீராய் உருவெடுக்கிறது!

 ஒரு விதையின் பனிக்குடத்தை உடைத்துவிடுகிறது !

இறந்த மலருக்கு இறுதியாத்திரை நடத்துகிறது !

ஏதோவொரு தேடலில் முடிவற்று முடிகிறது !




Wednesday, November 8, 2023

உன் கோபம்

 

உன் கோபம் என்னை கோபப்படச்செய்யவில்லை

உள்ளபடி உன் பாராமுகம்தான் ஏதேதோ செய்கிறது 

மண்ணுக்குள் புதைந்த வேரை போல அழச்செய்கிறது

உதிர்ந்த மலரின் இதழை போல 

கேட்ப்பாரின்றி வெறுமையடைகிறது 

உறக்கங்களை இருள்பறித்துவிட்டு இரவாகிப்போனது 

வெளிச்சத்தின் மடியிலும் நிழலாக சாய்கிறேன் 

தனிமையை அரவணைத்து 

உன்கோபங்களிருந்து விடுபட்டுக்கொள்கிறேன் 

அடுத்த முறையாவது சொல்லிவிடு 

உன்கோபத்தின் காரணத்தை! 



உன் அழகு


உன் அழகு ஒரு நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது

காட்டுமலர்களின் வாசத்தை சுமந்தபடியே 

உன் அழகு பயணிக்கிறது..  

தை வர்ணிக்க பழனிபாரதியின் 

வனரஞ்சினியில் வார்தைகளை 

தேடுவதற்குள் வேறுவடிவம் எடுத்துவிடுகிறாய்.. 

உன் அழகின் பிறப்பிடம் 

இறுதிவரை அறியப்படவில்லை ..

தடுப்பணைகளும் ஒருநாள் திறக்கத்தானே வேண்டும் 

உன் அழகின் கிளைகளை பரவிக்கொண்டே செல்கிறாய்.. 

பேரழகின் கடலில் அது சேர்ந்துவிடுகிறது 

உன் அழகு ஒரு நதியாக ஓடிக்கொண்டே இருக்கிறது