Tuesday, October 31, 2023

கடவுளின் பிள்ளை

குழந்தையுமல்ல, குமரியுமல்ல 

இரண்டுக்கும் இடைப்பட்ட பருவம்.. 

மிதிவண்டியில் முன்னால் ஒரு கூடை 

கூடையில் அவளுடைய சேமிப்புகள், கொஞ்சம் சிரிப்புகள் 

அடிக்கடி அவளை அங்கு பார்க்கலாம் 

நடைபாதை கடைகளில் பேரம்பேசுவாள்! 

தூரம் நின்று எதையோ ரசிப்பாள்!

விரல்களால் காற்றை விசைப்பலகையாக்குவாள்! 

அறியாதவர்க்கு இசையின் பிள்ளையாய் தெரிவாள்!  

யாரோ ஒருவரின் கூக்குரலுக்கு 

மௌனத்தின் குரலை மறுமொழியாக்கினாள் ! 

அப்போதுதான் கவனித்தேன் 

அவள் காதுகேளாத வாய் பேசமுடியாத பெண்! 

உலகின் தலைசிறந்த மொழியை 

தாய்மொழியை கொண்ட அவள் 

கடந்து போன போது  

கோவில் கருவறையின் வாசனை 

கடவுளின் பிள்ளையல்லவா !




Monday, October 30, 2023

முத்தங்களால்..

 

உன் விரல்களின் தேடுதலில் தொடுதலில் 

குற்றுயிரும் குறையுருமாய் கிடக்கிறேன்! 

எந்த பாகமும் மீந்துபோகாதபடி 

முத்தங்களால் மீதமுள்ள 

உயிரையும் எடுத்துவிடு! 

உன் மரணப்படுக்கையின் அருகில் 

எனக்கொரு படுக்கை தயார்செய்துவிடு !

சொர்க்கத்தில் மீண்டும் பிறப்போம் !





Saturday, October 28, 2023

குழந்தைகளின் ஒலி!

எததனை ஒலி சிதறல்களில் 

நம் கவனத்தை தொலைத்துக்கொண்டிருந்தாலும் 

சில ஒலிகள் மட்டும் நம் 

குழந்தைகளின் கவனத்தை ஈர்த்துவிடும் 

தெருநாயின் அழுகுரல் !

சிறுபறவையின் கூக்குரல் !

சிறுவயது இரவலகர்களின் யாசக குரல்! 

பஞ்சு மிட்டைக்காரரின் ஒலிக்கும் 

பனிக்கூழ் விற்பவரின் ஒலிக்கும் 

பத்து வித்தியாசம் சொல்லுவார்கள் !

படவரியில் வரும் அந்த பிரபல இசையொலி! 

ஒளிவுறு விளையாட்டின் தரநிலை ஒலி !

பெயர் தெரியாத அடுத்த தெரு பாட்டியின் அழைப்பொலி !

குழைந்தைகள் தங்களை தொலைத்துவிடாத 

ஒலிகளில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்!


 

பாட்டி சொன்ன கதைகள்

உன் பாட்டி சொன்ன கதைகள்.. 

நிலாவை பிட்டு உனக்கு ஊட்டி விடும்போது 

ஒட்டி கொண்ட மூன்றாம் பிறைதான் உன் உதடு என்றும் 

மேலும் தன்னை பறிகொடுத்துவிடக்கூடாதென்று 

தோன்றியதுதான் அமாவாசையும் பௌர்ணமியும்! 

நீ உறங்கும் போது சிரித்த சிரிப்புகளின்போது 

பிறந்ததுதான் நட்சித்திரமாம் மேலும் 

பகலில் நீ தேவதையாய் சென்று 

அவைகளை உறங்கவைப்பாயாம்!

உன் ஒரு சிட்டிகை குங்குமத்திற்காக 

குடம் சாய்ந்திருப்பதாக அந்த அந்தி பொழுதின்

செவ்வானத்தை சுட்டி காட்டினாள்!  

பாட்டி வடை சுட்ட கதைகளை விட 

உன்னிடம் சுட்ட கதைகள் அத்தனை பொருத்தமானது! 



Tuesday, October 24, 2023

திசையறிந்த பறைவையாய்!

 ஏதோவொரு மனக்கலக்கத்தில் 

நீண்டதூரம் தொலையவேண்டி 

அக்காவின் பண்ணைக்காட்டில் 

வெகுதூரம் வந்துவிட்டேன்...! 

தூக்கணாங்குருவிகள் தங்கள் சத்தத்தை 

நிறுத்திக்கொண்டன என் நிம்மதிக்காக ! 

ஆவாரம் பூ சிரிப்பில் 

மனிதர்களை போல் போலித்தனம் இல்லை !

அங்கும் இங்கும் அலைந்த பட்டாம்பூச்சி 

என்னை ஒருநிலை படுத்தியது !

அதற்காக என் விரலை நீட்டிய திசையில் 

அந்த அடர்ந்த புதரிலிருந்து 

வெடுக்கென்று முயல் ஒன்று வெளியேறியது! 

நான் வேடன் அல்ல நானும் வேட்டையாடப்படுவன்தான் 

என கத்தி சொல்லவேண்டும் என்று தோன்றியது 

அதன் நீண்ட காதுகளுக்கு கேட்க்குமல்லவா! 

ஈசல் புற்றின் வாசலில் அமர்ந்துவிட்டேன் 

ஏதோவொரு உற்சாகம் அதனோடு 

நானும் பறக்கலானேன் திசையறிந்த பறைவையாய் !



உன் வீதியில்

  உன் வீட்டு விண்டோவில் 

உன்னை பார்ப்பதும் 

ஷாப்பிங் மால் ல் விண்டோ ஷாப்பிங் செய்வதும் ஒன்றுதான்! 

நீ வீட்டில் இல்லாத பொழுதுகளில் 

உன் தெருவில் தனியாக வருகிறேன் 

தனிமையில் அல்ல !

 உன்னை பார்த்தமாத்திரத்தில் 

காய்கறிக்கடையில் கால்கிலோ காதல் வேண்டும் என்று கேட்டுவிட்டேன்!

உனக்கோ பூக்களின் மீது ஆசை 

பூக்காரிக்கோ உன்மீது ஆசை!

  தான் விற்பது போலி என்று தெரிந்தும் 

தைரியம் தான் அந்த பஞ்சுமிட்டாய்விற்பவனுக்கு 

உன் வீதியில் விற்பதற்கு! 

நீ அலட்சியமாய் என்னை பார்ப்பதே 

என் குறைந்தபட்ச இலட்சியங்களில் ஒன்றுதான்! 

பார்க்காமல் போனாலும் பரவாயில்லை 

நீ பார்த்தவர்களை பார்த்து 

நிம்மதிக்கொள்கிறேன்! 

  


Friday, October 20, 2023

இருள் பூசிய மேனியவள் !

 இருள் பூசிய மேனியவள் !

கருமேகங்களை குழைத்த தேகமது !

வர்ணகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட  நிறத்தவள் 

கூந்தலின் வர்ணத்தில் கொஞ்சம் குறைவுதான்! 

கூடினால் என்ன ? என்பதுபோல அவள் புருவம் 

அடர்ந்த நிறங்களில் அதுதான் அழகு !

ஆழமான பாரம்பரிய கொண்ட நிறம்! 

தொடக்க கால தூரிகைகளின் நிறம் !

எந்த நியாயப்படுத்துதலும் தேவையில்லாத நிறம் !

அழகுக்கும் நிறத்துக்கும் ஒப்பிடுவது தேவையயற்றது! 

நான் கறுப்பானவள் என்று பெருமையுடன் 

அவள் விழிகள் மொழிபெயர்த்தது அவளை !



Thursday, October 19, 2023

அவளது வயதுக்கு ஏற்ற

 அவள் அவளது வயதுக்கு ஏற்ற 

பிள்ளைகளோடு வளையல்கடைகளில் 

பொழுதை கழிக்கவில்லை !

காதலித்து கதைத்து 

 காலத்தை தொலைக்கவில்லை!  

சமூக வலைத்தளங்கள் அவள் மூளையை 

மென்றுதின்றுவிடவில்லை !

குழந்தைகளின் பனிக்கூழ் 

இனிமையில் அவள் கரைந்துவிடவில்லை! 

பழமைவாதத்தை எதிர்த்த 

புரட்சி பதுமைகளில் அவளும் ஒருவள்! 

அதற்காக அவளுக்கு ஐரோப்பாவின் 

உயரிய விருது கிடைத்திருக்கிறது ..

அனால் விருதை வாங்க அவள் வரவில்லை !

அந்த விருதை அவள் இன்னொரு புரட்சி பெண்ணின் 

கையில் கிடைக்கும்படி செய்துவிட்டு !

தூரதேசம் சென்றுவிட்டாள்  - இல்லை அவள் மரணம் வரை 

 அவர்கள் அடித்தே கொன்றுவிட்டனர்.. 

கடவுளின் பெயர்கொண்ட அவளை 

அந்த கடவுள் கூட காப்பாற்றவில்லை !

-மாஷா அமினி-

இருப்பத்திரெண்டு வயது ஈரானியன் இளம்பெண் !



Monday, October 16, 2023

காதலாகி!

நிறமற்ற மலரில் தேனருந்தியபின் 

வண்ணத்துப்பூச்சி என்னவாகும்? 

மின்மினிகளால் இரவுகளெல்லாம் 

விடிந்துவிட்டால்  என்னவாகும்? 

வனமாரிக்குளத்தில் தவறிவிழுந்த 

மீன்கொத்தி பறவை என்னவாகும்? 

வெயில்காலத்து மழைத்துளிகள் உன் 

வளைவுகளை நனைத்தபின் என்னவாகும்? 

இருவரின் முத்தத்துக்கிடையே 

நான்கு உதடுகள் என்னவாகும்? 

காதலாகும்! காதலாகி கலவியில் கரைந்து மீள் காதலாகும்!  



ஜனநாயக நாடு

அரசின் எல்லா ஒப்பந்தங்களின் பின்னாலும் 

ஒரு ஒப்பந்தக்காரர் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறார் 

மக்களாட்ச்சியின் பின்னால் ஒன்றுக்கும் மேற்பட்ட 

முதலாளிகள்  வெளிப்படையாகவே  இருக்கிறார்கள்

 முதலாளித்துவத்தின் முதுகில் ஒரு சர்வாதிகாரம் மறைந்திருக்கிறது 

ஆளும்கட்சியின் அரசியலில் அரசாட்சியின் சாயல் இருக்கிறது

கருத்துரிமை எந்நேரமும் கைதுசெய்யப்படலாம்.. 

கைதிகள் எந்நேரமும் கட்சியில் சேரலாம்! 

ஊடகங்கள் ஊமையாகி போகலாம்!

போராளிகளை தீவரவாதிகளாய் சித்தரிக்கலாம் 

சிறுபான்மையினரை சிதைக்கலாம் 

பிற்படுத்தப்பட்ட மக்களை நசுக்கலாம் 

ஆக மொத்தம் இது ஜனநாயக நாடு நம்புங்கள்!

 



Saturday, October 14, 2023

குளம் !

குளம் !

கோலங்கள் முற்றுப்பெறாத  ஒரு 

புள்ளியாய் இந்த பெரும் பூமியில்..


 அதன் அமைதியை அடிக்கடி மீன்கள் 

கலைத்துக்கொண்டே இருக்கின்றன!

 நீரின் நிசப்தத்தில் நீந்தும் இலைகள்!

மழையின் பிரதிகள் ஒவ்வொன்றயும் சேமித்துவைக்கிறது! 

மலரின் வேர்களில் கண்ணீராய் கரைத்துக்கொள்கிறது!  

கரைகளில் ஒற்றைக்காலில் தவமிருக்கும் மரங்கள்! 

 நிர்வாணத்தை மறைக்கும்  இருகலபாசிகள்!

 குழந்தைகள் வந்து குதிக்கும் வரை அது 

நிம்மதியற்று இருந்தது !







மழை

 இருபுறமும் திறந்தவெளியுடன் இருந்த 

அந்த பேரூந்துநிலையத்தில் 

பெரும் கோபத்துடன் என்னை ஒதுக்கியது 

அந்த மழை! 

சிறுது சாரலுடன் கை கால்களை நனைத்தபோது

 ஒரு எறும்பை போல பரவசமும் ஏறியது! 

கொஞ்சநேரத்திற்கெல்லாம் இருபுறமும் தலையை தவிர 

உடலையும் நனைக்க ஆரம்பித்தது !

......

எனது அருகில் அவர் உறங்கவில்லை... படுத்திருந்தார் 

அவரது ஆடை அவர் முகவரியற்றவர்

 என்பதை வெளிப்படுத்தியது.. 

முழுவதுமாய் நனைந்திருந்தார்.. 

அவரது உடல்மொழி இதுபோன்ற மழை 

நிறைய நனைத்திருக்கும் என்பதை காட்டியது! 

வெறுமையான பார்வையில் அந்த

 ஈரத்தை கடந்துகொண்டிருந்தார் 

அவரின் இரவு உணவையும் அது 

கரைத்துக்கொண்டிருந்தது.. 

கடவுள்கள் மேல் எனக்கு அடிக்கடி கோபம் ஏற்படும் 

முதன் முறையாக மழை மீது கோபம் அன்றுதான் வந்தது!


 

Tuesday, October 10, 2023

மலர் ஒன்று

 உனக்காக கொடுப்பதற்காக 

பதுக்கி வைத்திருந்த மலர் ஒன்று 

குறிப்பேடு ஒன்றில் பதுங்கியே இருந்தது !


மூன்று இதழ்களில் உன் மொத்த ஞாபகமும்!


பிரமிடுகள் இல்லாத அந்த பூவை துரத்திய 

மரணத்தை வென்ற ஒரு பூரிப்பு!

மெதுவாக அதன் வாசத்தை மட்டும் 

உதிர்த்துக்கொண்டே இருக்கிறது!


அதன் நிழலில் அது மலராய் மலர்ந்து இருக்கிறது!


அந்த சருகின் இடைவெளிகளில் 

நீ மீட்டி அருந்த நரம்புகள்!


நீ பேசிய வார்த்தைகளில்  ஒரு சொல் மட்டும் 

தவறி விழுந்ததைப்போல்!


 உன் இதழ்களின் குறுக்கு வெட்டு தோற்றம் போல் அதன் அழகு !

யாரும் அறியா உலகில் நிம்மதியாய் !






Monday, October 9, 2023

அலைபேசி செயலிகள்

தயங்கி தயங்கி நான் பேச ஆரம்பித்ததும் 

வேக வேகமாய் நீ திசை திருப்புவாய் 

 

இன்ஸ்டாவின் நான் நுழையும் நேரம் 

ஷார்ச்சாட் கு தாவிவிடுவாய்..

 முன்பெல்லாம் முதல் முப்பது நபர்க்குள் இருந்த நீ

இப்போது இருநூற்றி முப்பத்தைந்தாவது நபராக இருக்கிறாய் 

வாட்'ஸ் ஆப் ல் ஸ்டேட்டஸ் பார்ப்பதில் 

அதுவும் இல்லை சில நாட்களில்


குறுந்செய்தியில் வணக்கம் வைத்தால் 

படிப்பதையே நிறுத்திவிடுகிறாய் -அந்த 

ப்ளூ டிக் என்னை படுத்திவிடுகிறது ..


அலைபேசியின் அத்தனை செயலிகளிலும் 

என் சொற்கள் செயலிழந்து கிடக்கின்றன 


ஆனாலும் ன் விரல்கள் 

நேசக்கரம் நீட்டியபடியே 

எல்லாம் ஒரு கைப்பிடி அன்பை பகிர்ந்துகொள்ளத்தான் !