இருபுறமும் திறந்தவெளியுடன் இருந்த
அந்த பேரூந்துநிலையத்தில்
பெரும் கோபத்துடன் என்னை ஒதுக்கியது
அந்த மழை!
சிறுது சாரலுடன் கை கால்களை நனைத்தபோது
ஒரு எறும்பை போல பரவசமும் ஏறியது!
கொஞ்சநேரத்திற்கெல்லாம் இருபுறமும் தலையை தவிர
உடலையும் நனைக்க ஆரம்பித்தது !
......
எனது அருகில் அவர் உறங்கவில்லை... படுத்திருந்தார்
அவரது ஆடை அவர் முகவரியற்றவர்
என்பதை வெளிப்படுத்தியது..
முழுவதுமாய் நனைந்திருந்தார்..
அவரது உடல்மொழி இதுபோன்ற மழை
நிறைய நனைத்திருக்கும் என்பதை காட்டியது!
வெறுமையான பார்வையில் அந்த
ஈரத்தை கடந்துகொண்டிருந்தார்
அவரின் இரவு உணவையும் அது
கரைத்துக்கொண்டிருந்தது..
கடவுள்கள் மேல் எனக்கு அடிக்கடி கோபம் ஏற்படும்
முதன் முறையாக மழை மீது கோபம் அன்றுதான் வந்தது!



No comments:
Post a Comment